சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில், 2019ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக இந்தியாவின் லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, வளர்ந்துவரும் வீரருக்கான விருதை இந்தியாவின் விவேக் சாகர் வென்றார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங், பெல்ஜியம் வீரர் ஆர்துர் வான் டுரேன், அர்ஜென்டினாவின் லுகாஸ் விலா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இதில், 35.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆர்துர் வான் டுரேன், லுகாஸ் விலாவைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரருக்கான விருதை மன்ப்ரீத் சிங் வென்றுள்ளார். இதன்மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். நடுகள வீரரான இவர் 2011இல் இந்திய அணிக்காக அறிமுகமாகினார்.