இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமாக வலம் வந்தவர் பல்பீர் சிங். இவரின் அசத்தல் ஆட்டத்தினால் 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்நிலையில், 95 வயதான பல்பீர் சிங் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இருந்தபோதும், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பல்பீர் சிங் இவரிம் இறப்புச் செய்தியறிந்த பல்வேறு பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டரில் பல்பீர் சிங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அது குறித்து மோடியின் ட்விட்டர் பதிவில், ‘பத்ம ஸ்ரீ பல்பீர் சிங் அவரது விளையாட்டு திறமையால் அனைவரது மனதிலும் இடம்பிடித்தவர். அவர் தன் நாட்டிற்காக பெருமைகளையும், பதக்கங்களையும் தேடித் தந்தவர். சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ஒரு சிறந்த ஹாக்கி வீரர் மற்றும் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவரது இறப்புச் செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரி, ஹர்பஜன் சிங், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க:ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல்!