இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி மூன்று முறை தங்கப்பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பல்பீர் சிங். 95 வயதான இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மொகாலி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 6:30 மணியளவில் உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தியறிந்து பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அவற்றுள் சில...
- இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தனது ட்விட்டர் பதிவில், "மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான பல்பீர் சிங் இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இந்திய ஹாக்கி அணிக்காக அவர் செய்துள்ள அனைத்தும் இன்றியமையாதவை. மேலும், அவர் எங்களுக்கு எப்போதும் முன்மாதிரியாக திகழ்ந்து வந்தார். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், "ஜாம்பவான் பல்பீர் சிங் இறப்பு செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது இறப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது ட்விட்டர் பதிவில், "பல்பீர் சிங், அவரது துறையில் மிகச்சிறந்த வீரராவார். அவருக்கு என்னுடைய இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில், "இந்திய விளையாட்டு துறையின கறுப்பு நாள் இன்று. ஏனெனில், பல்பீர் சிங் நம்முடன் இல்லை. அவரின் சாதனைகளை நான் தெரிந்துகொண்டால் அது ஆச்சரியத்தை அளிக்கும். அதில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள், இறுதிப் போட்டியில் ஐந்து கோல்கள் என பல சாதனைகளை படைத்தவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
-
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்தரா தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் வீரர்களில் ஒருவரான பல்பீர் சிங் உயிரிழந்ததைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். அவரை போன்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்மாதிரிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். அவருடைய உதாரணம் உலகெங்கிலும் உள்ள வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்".
-
இந்தியாவின் நட்சத்திர துப்பாகிச் சுடுதல் விராங்கனை ஹீனா சித்து தனது ட்விட்டர் பதிவில், "முதலில் பல்பீர் சிங்கின் மறைவிற்கு அவரது கும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். நான் பல்பீர் சிங்கை பலமுறை சந்தித்து பேசியுள்ளேன். ஆனால் அவர் தற்போது உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தத்தையளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அவர் தற்போதுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், "பத்மஸ்ரீ பல்பீர் சிங் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ஹாக்கி பேட்டால் செய்த சாதனை இவ்வுலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அவரை நான் நேரில் சந்தித்தது என்னுடைய அதிர்ஷ்டன் என நினைக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘உமிழ்நீர் குறித்து ஐசிசி விதித்த தடை இடைக்கால நடவடிக்கை’ - அனில் கும்ளே!