புவேனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2020-21ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.ஹெச். லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி ஆறாவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிலன் வுதர்ஸ்பூன், 18ஆவது நிமிடத்தில் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டாம் ஜோசப் விக்ஹம் கோல் அடித்து அசத்தினர்.
இதற்கு பதிலடி தரும்விதமாக இந்திய வீரர் ராஜ்குமார் பால் ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதையடுத்து, மீண்டும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 41, 42ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தது. ஆஸ்திரேலிய வீரர் தாமஸ் ஷார்ப், ஜேகப் ஜான் ஆண்டர்சன் ஆகியோர் முறையே கோல் அடித்தனர்.
இதனால், மூன்றாவது குவார்டரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, கடைசி குவார்டரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு 47ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்து. இதைச் சிறப்பாகப் பயன்படுத்தி ராஜ்குமார் பால் கோலாக்கினார்.