2020-21ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.எச்., (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரு போட்டிகளில் மோதவேண்டும்.
அதன்படி, கடந்த மாதம் புவனேஷ்வரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, சனிக்கிழமை(பிப்ரவரி 8) நடந்த ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று புவனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்டுத்திய அலெக்ஸாண்டர் ஹென்ட்ரிக்ஸ் அதனை கோலாக மாற்றினார்.
இதையடுத்து, 15ஆவது நிமிடத்தில் இந்தியாவின் விவேக் சாகர் பிரசாத் கோல் அடித்தார். முதல் குவாட்டர் முடிவில் 1-1 என்ற சமனில் முடிந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது குவாட்டர் தொடங்கியதுமே 17ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் மெக்சிமி கோல் அடித்தார்.
ஆனால், உலக சாம்பியனுக்கு அதிர்சியளிக்கும் விதத்தில் அடுத்த 30 வினாடியே இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் 2-2 என்று சமநிலையை எட்டியது.
இரண்டாவது குவாட்டர் முடிய நான்கு நிமிடங்களே இருக்க பெல்ஜியம் அணியின் மெக்சிமி தனது இரண்டாவது கோலை அடிக்க, அது பெல்ஜியம் அணி மீண்டும் முன்னிலை பெற உதவியது.
ஆட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது குவாட்டர்களில் இந்தியா கோல் அடிக்க கடுமையாக முயன்றபோது, பெல்ஜியம் அணியின் பலம்வாய்ந்த தடுப்பு ஆட்டத்தால் இந்தியாவின் ஆசை நிறைவேறவில்லை.
ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வையைத் தழுவியது.
இப்போட்டி குறித்து இந்தியா அணியின் கேப்டன் மன்தீப் சிங் கூறுகையில்,"இந்த இரு போட்டிகளிலிருந்து நாங்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். கோல் அடிக்க எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தபோதும் அதை நாங்கள் வீணாக்கிவிட்டோம்" என்றார்.
இந்தியா வரும் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் தர வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறது.
இதையும் படிங்க: கொரோனோ வைரஸ் - இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சீன பயணம் ரத்து