எஃப்.ஐ.ஹெச். சீரிஸ் ஃபைனல் ஹாக்கித் தொடர் போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வரிலுள்ள கலிங்க மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியை எட்டும் இரு அணிகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டங்ளுக்கு நேரடியாக தகுதிபெறும் என்பதால் அனைத்து அணிகளும் வெற்றிபெற கடும் முயற்சியெடுத்து வருகின்றன.
அட்டகாசமான தொடக்கம்
இத்தொடரில் ஹாக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அணி தொடரின் ஆரம்பத்தில் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட அமெரிக்காவாகும். தொடரின் முதல் ஆட்டத்திலேயே தரவரிசையில் 25ஆவது இடத்திலிருக்கும் அமெரிக்க 16ஆவது இடத்திலிக்கும் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்று வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து மெக்சிகோவை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா தன்னைவிட பலம் பொருந்திய ஜப்பானுடன் போட்டியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்து ஆச்சரியமளித்தது.
இத்தொடரில் தொடர்ந்து அற்புதமாக ஆடிய அமெரிக்கா பி பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதியை எட்டியது. ஓரிருவர் என இல்லாமல் அணியின் அனைத்து வீரர்களும் அற்புதமாக ஆடி கூடியிருந்த ஹாக்கி ரசிகர்களை பரவசப்படுத்தினர்.
ஜப்பான் வீரரிடமிருந்து பந்தை கைப்பற்ற முயலும் அமெரிக்க வீரர்கள் 23 ஆண்டுக் கனவு
சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளை எட்டும் முனைப்பிலுள்ள அமெரிக்கா இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் அதன் ஒலிம்பிக் கனவிற்கு இன்னும் ஒருபடி அருகில் செல்லும். அமெரிக்கா தனது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இன்று (ஜூன் 14) மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிறது.
கோல் அடித்த உற்சாகத்தில் அமெரிக்க அணி வீரர்கள் இந்தியா இதுவரை
இத்தொடரில் ஹீரோ என்றால் அது இந்திய அணிதான். 2018ஆம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளின் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் குறைந்த மலேசியாவிடம் வீழ்ந்ததையடுத்து, 2020 டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்பை இழந்தது.
பின் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை இறுதிப் போட்டியில் தரவரிசையில் 17ஆவது இடத்திலிருந்த பலம் குறைந்த கொரியாவுடன் ஷுட் அவுட் முறையில் வீழ்ந்தது இந்திய அணி. இந்த தோல்வி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியளித்தது.
முக்கியப் போட்டிகளில் அடைந்த தொடர் தோல்வியினால் இந்தத் தொடரில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்கியது இந்தியா. பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் கிரஹாம் ரீட் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் சர்வதேச ஹாக்கி தொடர் என்பதால் இந்தியாவின் செயல்பாடுகள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியது.
கோல் அடிக்கும் முனைப்பில் இந்திய வீரர் வருண் குமார் இது காலா கில்லா
புதிய பயிற்சியாளர் புதிய சீருடை என கெத்தாக களமிறங்கிய இந்தியா தனது முதல் போட்டியிலேயே 10-0 என்ற கோல் கனக்கில் ரஷ்யாவை பந்தாடியது. இந்தியாவின் எட்டு வீரர்கள் கோல் அடித்திருந்தாலும் தனது 250ஆவது போட்டியில் ஆடிய இந்தியாவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான மன்பிரீத் சிங் கோல் அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எளிதில் வெற்றிபெறும் என்று கருதப்பட்ட போலந்துடனான ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் போராடியே வெற்றிபெற முடிந்தது. போட்டியின் இக்கட்டான தருணத்தில் இரண்டு கோல்களை அடித்து தான் மாஸ் என்று நிரூபித்தார் கேப்டன் மன்பிரீத் சிங்.
இந்திய அணி பயிற்சியாளர் கிரஹாம் ரீட்டுன் கேப்டன் மன்பிரீத் சிங் பின்னர் தனது கடைசி லீக் போட்டியிலும் 10-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை விழ்த்தி கலிங்க மைதானம் என்றென்றும் தனது கில்லா என்று மீண்டும் காட்டியது இந்திய அணி. இதுவரை இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆகஷ்தீப் சிங் ஐந்து கோல்களை அடித்துள்ளர்.
இந்நிலையில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை நாளை (ஜூன் 14) இரவு 7.15க்கு எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளை எட்டும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.