இந்தியாவில் சர்வதேச ஹாக்கி போட்டிகள் அனைத்தும் ஒடிசா தலைநகர் புபனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில்தான் நடைபெறும். இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு ஒடிசா மக்களிடமிருந்து பேராதரவு கிடைக்கும். இந்த நிலையில், கரோனா வைரசின் தாக்கம் ஒடிசா மாநிலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 42 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக ஒடிசா மாநில அரசுக்கு ஹாக்கி இந்தியா ரூ. 21 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் முகமது முஷ்டாக் அகமது கூறுகையில், ஹாக்கி விளையாட்டிற்கு புபனேஷ்வரில் உள்ள ரசிகர்கள் என்றும் ஆதரவு தருவர். ஆனால் கரோனா வைரசால் தற்போதை நிலைமையை கருத்தில் கொண்டு நாங்கள் அளித்துள்ள ரூ. 21 லட்சம் நிதியுதவி அவர்களுக்கு உதவும்" என்றார்.