ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் ஓய்வுக்குப் (1956) பிறகு 1960 முதல் 1980 வரையிலான காலக்கட்டங்களில் ஹாக்கி போட்டியில் இந்தியா கோலோச்சி நின்றதற்கு ஹர்பிந்தர் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. சென்டர் ஃபார்வர்டு வீரரான இவர் 1960இல் தனது 18 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
1960 - 1972 வரையிலான காலக்கட்டங்களில் இவர் இந்திய அணிக்காக மூன்றுமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். குறிப்பாக 1964இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்ல இவர் முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். அந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் ஐந்து கோல்களை அடித்து அசத்தினார்.
அதேபோல, 1966இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. 1972இல் ஓய்வுபெற்ற பின்னரும் இவர் பயிற்சியாளராகவும், தேர்வுக்குழு உருப்பினராகவும் இருந்து ஹாக்கி விளையாட்டை மேலும் பிரபலமடையச் செய்தார்.
டெல்லியில் நேற்று மூன்றாவது ஹாக்கி இந்தியா விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், வாழ்நாள் சாதனையாளரான தயான் சந்த் விருதுக்கு ஹர்பிந்தர் சிங் தேர்வுசெய்யப்பட்டார். இவருக்கு இந்த விருதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வழங்கி கெளரவித்தார். இவர் முன்னதாக 1967இல் மத்திய அரசு அர்ஜூனா விருது வென்றார்.
இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங்
இதையடுத்து, ஆடவர் பிரிவில் 2019ஆம் ஆண்டின் துருவ் பத்ரா விருதை இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங்கிற்கும், மகளிர் பிரிவில் கேப்டன் ராணி ராம்பாலும் வென்றனர். மேலும், வளர்ந்துவரும் வீரர், வீராங்கனைக்கான விருது முறையே விவேக் சாகர் பிரசாத்திற்கும், லால்ரேம்சியாமிக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரர், வளர்ந்துவரும் வீரர், வீராங்கனை ஆகிய விருதுகளை மன்ப்ரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், லால்ரேம்சியாமி ஆகியோர் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலின் கதை!