தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹிட்லர் வியந்த மேஜர் தயான் சந்த்! - ஒலிம்பிக்

மேஜர் தயான் சந்த் ஹாக்கி ஆட்டத்தை பார்த்து வியந்த ஹிட்லர் அவரை ஜெர்மனிக்கு அழைத்தார். அவரின் அழைப்புக்கு புன்னகையுடன் மறுப்பு தெரிவித்த தயான் சந்த், “நான் இந்தியன், ஒருபோதும் விலை போக மாட்டேன்” என்று பதிலுரைத்தார்.

Dhyan Chand
Dhyan Chand

By

Published : Aug 29, 2021, 5:42 AM IST

ஹைதராபாத் : மேஜர் தயான் சந்த். இவர்தான் ஹாக்கி வீரர்களின் தாரக மந்திரம். மாய ஜாலக்காரன், தி விஸார்ட் (மந்திரவாதி) என்றெல்லாம் சக வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினராலும் புகழப் பெற்றவர் மேஜர் தயான் சந்த்.

இவர் 1905ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தார். இவர் ஆங்கிலேய மற்றும் இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றியுள்ளார்.

ஹாக்கி மீது காதல்

ராஜ்புட் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த தயான் சந்த்தின் இளைய சகோதரர் ரூப் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர் ஆவார். இவரின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பதால் பல மாநிலங்களில் கல்வி பயிலும் வாய்ப்பு தயான் சந்த்துக்கு கிடைத்தது.

கல்வி ஒருபுறம் இருந்தாலும் தயான் சந்த்துக்கு ஹாக்கி மீது தீராக் காதல் ஏற்பட்டது. இதன் காரணமாக 16 வயதில் ராணுவத்தில் பணிபுரியும்போதே ஹாக்கி விளையாட்டையும் தனது வாழ்வின் ஒரு அங்கமாக ஏற்படுத்திக்கொண்டார்.

அறிமுகப் போட்டி

1926ஆம் ஆண்டு இந்திய ராணுவ ஹாக்கி அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அங்கு 18 ஹாக்கி போட்டிகளில் இந்திய ராணுவ அணி வென்றது. அந்தத் தொடரில் தயான் சந்த் தன்னுடைய ஹாக்கி வித்தையை காண்பித்தார்.

இது அவருக்கு நாடு முழுக்க பெரும் புகழை பெற்று கொடுத்தது. இதற்கிடையில், 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக ஹாக்கி இணைக்கப்பட்டது. அப்போது இந்திய அணியில் தயான் சந்த் இடம்பிடித்தார்.

ஒலிம்பிக் தங்க பதக்கம்

முதல் ஒலிம்பிக் தொடரிலேயே 5 போட்டிகளில் 14 கோல் அடித்து அசத்தினார். அத்துடன் இந்திய முதல் தங்கம் வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இரண்டாவது தங்கம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அந்த முறை தயான்சந்த் உடன் ஹாக்கி அணியில் அவருடைய சகோதரர் ரூப் சிங்கும் இருந்தார்.

வியந்த ஹிட்லர்

பின்னர் 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி கேப்டனாக தயான்சந்த் நியமிக்கப்பட்டார். அந்தப் போட்டியில் இந்தியா அடித்த 8 கோல்களில் 6 கோல்கள் தயான் சந்த் அடித்தவை.

இந்தப் போட்டியில் ஜெர்மனியை துவம்சம் செய்து இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

இந்தப் போட்டியை நேரில் பார்த்து வியந்த அடால்ப் ஹிட்லர், “நீங்கள் ஜெர்மனிக்கு வந்துவிடுங்கள்” என்றார். இதற்கு புன்னகையுடன் பதிலளித்த தயான் சந்த், நான் இந்தியன் விலைபோக மாட்டேன்” என்று பதிலுரைத்தார்.

ராணுவ மேஜர்

தயான் சந்த் பதிலை பார்த்து வியந்துபோன ஹிட்லர் தயான் சந்த்துக்கு சல்யூட் அடித்தார். அதேநேரம் அவரை ஹாக்கி மந்திரவாதி எனப் புகழ்ந்தார்.

பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய பிறகு தயான்சந்த் இந்திய ஹாக்கி அணியிலிருந்து விலகி இருந்தார். ராணுவ அணியில் மட்டும் அவ்வப்போது போட்டிகளில் பங்கேற்று வந்தார். 1956ஆம் ஆண்டு அவர் ராணுவத்திலிருந்து மேஜர் பதவியுடன் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் சில நாள்கள் ஹாக்கி பயிற்சியாளராகவும் இருந்தார்.

கேல்ரத்னா விருது

1979ஆம் ஆண்டு தன்னுடைய 74ஆவது வயதில் மறைந்தார். அவருடைய நினைவாக ஒரு தபால் தலை வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ள ஒரே ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் தான்.

அவருடைய பிறந்தநாளை இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக அறிவித்து அவரை கௌரவித்தது. தற்போது விளையாட்டு துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணப் படம்

இவரின் 116ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இவரின் வாழ்க்கை தொடர்பான ஆவணப் படமான மேஜர் தயான் சந்த் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் - விளையாட்டு வீரர்கள் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details