சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் வென்றுள்ளார். இதன்மூலம், இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையையும் அவர் படைத்துள்ளார். கடந்த ஆண்டு முதல் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கையில் எடுத்துகொண்ட இவர், அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார்.
குறிப்பாக, டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற முக்கியக் காரணமாக விளங்கினார். ஒரு காலக்கட்டத்தில் ஒலிம்பிக்கில் தலைநிமர்ந்திருந்த இந்திய அணி கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக தலைகுணந்தே உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பது குறித்து மன்ப்ரீத் சிங் கூறுகையில்,
"கடந்த கால ஒலிம்பிக் சாதனைகளில் நாங்கள் கவனம் செலுத்த விரும்பவில்லை. விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் புது விஷயத்தை கற்றுவருகிறோம். சமீபத்திய எஃப்.ஐ. ஹெச். ப்ரோ லீக் தொடரில் உலக சாம்பியன் பெல்ஜியமை வீழ்த்தினோம். இதனால், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் நல்ல மனநிலையுடன் களமிறங்கவுள்ளோம். நிச்சயம் இந்தத் தொடரில் ஒரு அணியாக நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்று 40 ஆண்டுகால தாகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்றார்.