டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுமார் ஒருமாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கான பயிற்சி மீண்டும் தற்போது பெங்களூருவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹாக்கி வீரர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூருக்கு திரும்பியுள்ளனர்.
பெங்களூரு திரும்பிய அனைத்து வீரர்களுக்கும் முதலில் ரேப்பிட் டெஸ்ட் மூலம் கரோனா கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில், அனைத்து வீரர்களுக்கும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. இருப்பினும், இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்திர குமார் ஆகியோருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதன் காரணமாக மன்பிரீத் சிங், சுரேந்திர குமார் ஆகியோருடன் பயணம் செய்த 10 வீரர்களுக்கு RT-PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார் ஆகிய நான்கு வீரர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், சில வீரர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.