2020-21 ஆண்டுக்கான எஃப். ஐ. ஹெச் ப்ரோ ஹாக்கி லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி, புபனேஷ்வரின் கலிங்கா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
முதல் குவார்ட்ரில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருந்தும் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. இந்த நிலையில், 23ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிரெண்ட் மிட்டான் கோல் அடித்தார். அதற்கு பதிலடி தரும்விதமாக இந்திய அணியின் நட்சத்திர டிஃபெண்டர் ருபிந்தர் பால் சிங் பெனால்டி கார்னர் முறையில் மிரட்டலான கோல் அடித்தார்.
இதையடுத்து, இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்ததால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்பின் ஆஸ்திரேலிய அணி மீண்டும் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பலனாக 46ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் சலவ்ஸ்கி கோல் அடித்து அசத்தினார்.