நாடு தழுவிய முழு ஊரடங்கால் ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 18 நாள் உடற்பயிற்சி சவாலை அறிமுகப்படுத்தியது.
இந்த சவாலானது, கரோனா விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், நாடு முழுவதும் முழு அடைப்பு காலத்தில் செயலில் உள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்ப, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும்படி, மகளிர் ஹாக்கி அணி மக்களை ஊக்குவித்தது.
இந்தச் சவால் மே 3ஆம் தேதியன்று முடிந்தது. இந்தச் சவால் குறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி கூறுகையில், 'எங்களுக்கு கிடைத்த பதில் உண்மையிலேயே மிகப்பெரியது. குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இந்திய ஹாக்கி பிரியர்கள் இந்த சவாலில் பங்கேற்று, அதற்கான பங்களிப்பை வழங்கினர். இந்திய பெண்கள் அணி சார்பாக, இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
ஏழைகளுக்கு உதவுவதற்கான முயற்சி. பல ஹாக்கி இந்தியா உறுப்பினர் பிரிவுகள், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர்கள் இந்த முயற்சியில் பங்கேற்பதன் மூலம் தங்கள் ஆதரவைக் காண்பிப்பது மனதுக்கு இதமாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்'என்றார்.
இதைத் தொடர்ந்து இந்திய மகளிர் ஹாக்கி அணியின் துணை கேப்டன் சவிதா, 'ஆரம்பத்தில் நாங்கள் எங்கள் தலைமை பயிற்சியாளருடன் இந்த சவாலைப் பற்றி விவாதித்தபோது, இதன் விளைவு மிகப் பெரியதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைக் கண்டோம். அது எங்களுக்கு மேலும் ஊக்கமளித்தது. இந்த முயற்சியில் எங்களுக்கு ஆதரவளித்ததற்காக தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே மற்றும் முழு ஆதரவு அளித்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். ஏனென்றால், நாங்கள் மிகவும் வலுவாக உணர்ந்தோம். அணி மிகவும் கடினமான நிதி பின்னணியில் இருந்து வருகிறது’ என்றார்.
மகளிர் அணிக்கு வாழ்த்துகளுடன் தொடங்கிய இந்திய ஹாக்கி குழுத் தலைவர் முஷ்டாக் அஹ்மத், "இந்திய மகளிர் ஹாக்கி அணி இதுபோன்ற சிந்தனைமிக்க முயற்சியை மேற்கொள்வது மனதைக் கவர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். வீரர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். விளையாட்டு வீரர்கள் எப்போதும் ஒரு பெரிய இதயம் கொண்டவர்கள் என்பதையும், தேவைப்படும்போது உதவ முன்வருவார்கள் என்பதையும் அணி நிரூபித்துள்ளது. ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற காரணத்தை முன்னெடுத்து நிதி திரட்டியதற்கு அணிக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்'' என்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி திரட்டிய பணம், டெல்லியைச் சேர்ந்த உதய் அறக்கட்டளைக்கு (https://www.udayfoundation.org/) நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த நிதி பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குடிசைவாசிகள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு உணவு, கிருமிநாசினி (சானிடைசர்) உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிமுகப்படுத்திய உடற்பயிற்சி சவாலில் கலந்துகொண்டவர்கள், தங்களது பங்களிப்பாக ரூ.100 அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தோனி, விராட், ரோஹித் ஆகிய மூன்று கேப்டன்களுமே தனித்துவமானவர்கள்!'