கால்பந்து விளையாட்டில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, யுவென்டஸ் வீரர் ரொனால்டோ ஆகிய இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தால், கால்பந்து விளையாட்டில் ஆளுமை செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளையும் படைத்துவருகின்றனர்.
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட்டிலிருந்த ரொனால்டோவை யுவெண்டஸ் அணி விளையாட ஒப்பந்தம் செய்தது. இதனால், எல்கிளாசிகோ தொடரில், மெஸ்ஸி - ரொனால்டோ இருவருக்குள் ஒன்பது ஆண்டுகளாக இருந்த போட்டி முடிவுக்கு வந்தது. இவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவினாலும், யார் சிறந்த வீரர் என்பதில் இவர்களது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிறந்த வீரருக்கான விருது வழங்கும் விழா நேற்று மொனக்கோவில் நடைபெற்றது. இதில், மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி லீவர்பூல் அணியின் தடுப்பாட்டக்காரர் விர்ஜில் வான் டைக் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.