ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, ஹியூஸ்கா அணியுடன் மோதியது.
இப்போட்டியின் முடிவில் பார்சிலோனா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஹியூஸ்கா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 13ஆவது, 90ஆவது நிமிடங்களில் கோலடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
மேலும் இப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்றதன் மூலம் பார்சிலோனா கிளப் அணிக்காக 767ஆவது போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தக்கவைத்திருந்த ஸாவி ஹெர்னான்டெஸின் (767) சாதனையை சமன்செய்துள்ளார்.
பார்சிலோனா அணிக்காக விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸி இதுவரை 460 கோல்களை அடித்துள்ளார். அதிலும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மட்டும் 110 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெக்ஸிகன் ஓபன்: நில நடுக்கத்திற்கு மத்தியிலும் போட்டியைத் தொடர்ந்த வீரர்கள் - வைரல் காணொலி