அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கடந்த நவ.25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அர்ஜென்டினா பிரீமியர் டிவிசன் கால்பந்து தொடரின் நட்சத்திர அணியாக போகா ஜூனியர்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தின் போது மாரடோனாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்த அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் மாரடோனவின் பெயர் பதித்த ஜெர்சியில் விளையாடினர். மேலும் இப்போட்டியை மாரடோனாவின் மகள் டால்மா மாரடோனா கண்டு களித்தார்.
அப்போது ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய போகா ஜூனியர்ஸ் அணியின் எட்வின் கார்டோனா அதனை கோலாக மாற்றினார். பின்னர் கோலடித்த மகிழ்ச்சியில் மாரடோனா பெயர் பதித்த ஜெர்சியை மைதானத்தில் நடுவே வைத்து மரியாதை செலுத்தினார்.
மாரடோனவுக்கு மரியாதை செலுத்திய போகா ஜூனியர்ஸ் இதனைக் கண்ட டால்மா மாரடோனா கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி, காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. இப்போட்டியின் முடிவில் போகா ஜூனியர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூவெல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதையும் படிங்க:மேலும் மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு கரோனா உறுதி!