இது தொடர்பாக இபிஎல் (இங்கிலிஷ் பிரீமியர் லீக்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகத்தினர், பணியாளர்கள் என ஆயிரத்து 197 பேருக்கு ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இங்கிலிஷ் பிரிமீயர் லீக் தொடரின் நேர்மை, வெளிப்படைத்தன்மையை காட்டவே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட நபரின் பெயர் அல்லது அணி குறித்த எந்த தகவலும் வெளியிடப்படமாட்டாது. அடுத்தடுத்து சோதனைகளுக்கு பிறகு அதன் முடிவு மட்டும் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே டோட்டன்ஹாம் அணி, தங்களது அணியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் தொற்று பாதிக்கப்பட்டவரின் பெயர், பாதுகாப்பு கருதி வெளியிடப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக மிகப் பெரிய தொடரான இங்கிலிஷ் பிரீமியர் லீக், பாதி நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது இந்தத் தொடர் ரசிகர்கள் இல்லாமல் ஜூன் 17ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் புள்ளிப்பட்டியல், தற்போதைய நிலவரப்படி லிவர்பூல் அணி அதிக வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு 25 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணி உள்ளது.