பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் தியாகோ சில்வா, பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கிளப் அணியின் கேப்டனாக விளங்கிவருகிறார். தனது சிறப்பான தடுப்பாட்டத்தால் பாரிஸ் அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார்.
இதனிடையே, பிரெஞ்சு லீக் 1 சீசனின் நேற்றைய ஆட்டத்தில், பி.எஸ்.ஜி (பாரிஸ் செயின்ட் ஜெர்மன்) அணி, பொர்டியாக்ஸ் (bordeaux) அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் 17ஆவது நிமிடத்தில் தியாகோ சில்வாவின் வலது காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் போட்டியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
நெய்மரின் கடைசி நிமிட கோலால் பிஎஸ்ஜி அணி இப்போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. இந்நிலையில், தியாகோ சில்வாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை ஒத்துழைத்தால், அவர் மூன்று வாரங்களுக்கு பின் அணிக்கு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
இதனால், மார்ச் 12ஆம் தேதி ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி - டார்ட்மண்ட் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட நாக் அவுட் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க:1000 கோல்... கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!