ஸ்பெயினின் கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட், வலென்சியா, அத்லெடிக்கோ மாட்ரிக் உள்ளிட்ட நான்கு அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடர் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதன் அரையிறுதிப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என வலேன்சியாவையும், அத்லெடிக்கோ மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ரியல் மாட்ரிட் - அத்லெடிக்கோ மாட்ரிட் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 115ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நடுகள வீரர் ஃபெட்ரிகோ வால்வர்டே, அத்லெடிக்கோ மாட்ரிட் அணியின் ஸ்ட்ரைக்கர் மோரோடாவை ஃபவுல் செய்ததால் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் வழங்கினார்.