இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளார். 35 வயதாகும் சுனில், தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
அதில், ‘’நான் இன்னும் எத்தனை போட்டிகளில் விளையாடப் போகிறேன் எனத் தெரியாது. ஆனால் அதன் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. ஓய்வு பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. ஆனால் ஒவ்வொரு ஆட்டத்தில் ஆடும்போதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் அந்த ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.
முன்பைவிட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு அணியாக, அதிகமானப் போட்டிகளில் வெற்றிபெற வேண்டியுள்ளது. இப்போது அணியின் ஒரே குறிக்கோள் 2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஏ.எஃப்.சி ஏசியன் கோப்பைத் தொடருக்கு தகுதிபெறுவது மட்டும்தான்.
காண்ட்டினண்டல் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து தகுதிபெற வேண்டும். அதில் எவ்வித சமரசமும் கிடையாது. இப்போது அணி சீராக அமைந்துள்ளது. இந்த அணியால் சீனாவில் நடக்கும் ஏசியன் கோப்பைத் தொடருக்கு தகுதிபெற முடியவில்லை என்றால், எவ்வித விளக்கமும் அளிக்கமுடியாது. அதற்கு சரியாக விளையாடாதது மட்டுமே காரணம்’’ எனக் கூறினார்.
இந்திய அணி இதுவரை 5 உலகக்கோப்பைத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடி, 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த தகுதிச்சுற்றுப் போட்டி மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் ஐஎஸ்எல் தொடர் பற்றி பேசுகையில், ’’பெங்களூரு எஃப்.சி. அணியை குறித்து பெருமைக்கொள்கிறேன். ஏனென்றால், பெங்களூரு அணியிலிருந்து 5 முதல் 6 வீரர்கள் இந்திய அணிக்குள் இடம்பிடித்துள்ளனர். இளம் வீரர்கள் அதிகமான திறமைகளைக் கொண்டுள்ளனர். இப்போது செய்வதைத் தொடர்ந்து செய்வது முக்கியம். இப்போது செய்துவருவதை வைத்து மனநிறைவோ, தேங்கி நிற்கவோ கூடாது. ஏனென்றால் செல்ல வேண்டிய பாதை அதிகம் உள்ளது’’ என்றார்.
இதையும் படிங்க: இது தான் என்னோட இந்திய அணி - சுனில் சேத்ரி ட்விட்