ஐ லீக் கால்பந்து தொடரில் மோகன் பாகன் அணியை வழி நடத்தியவர் ஸ்டிரைக்கர் சுபா கோஷ். இந்நிலையில், சுபா கோஷ் தனது அறிமுக ஐஎஸ்எல் சீசனுக்காக காத்திருந்தார். அதன்பின் மோகன் பாகன் அணி, ஏடிகேவுடன் இணை நடப்பு ஐஎஸ்எல் தொடரை சந்தித்து வருவதால், அந்த அணியில் சுபா கோஷ் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சுபா கோஷை தனது அணிக்காக ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், நட்சத்திர ஸ்டிரைக்கர் சுபா கோஷ் ஈடிவி பாரத்துடன் சிறப்பு உரையாடலில் பங்கேற்றார். சுபா கோஷின் சிறப்பு உறையாடல்..,
கேள்வி: ஏ.டி.கே மோகன் பாகானை விட்டு வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்தது?
சுபா கோஷ்: அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு நேரம் என்பது முக்கியமானது என்று நம்புகிறேன். ஏடிகே மோகன் பாகன் அணியில் பல தேசிய வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் அணியில் இணைந்து விளையாட என்னக்கு இன்னும் அனுபவத்தை பெறவேண்டும்.
முதலில் நான் ஏடிகே மோகன் பாகன் அணியில் நிச்சயம் இடம்பெறுவேன் என்று தான் நம்பினேன். ஆனால் அணி தேர்வாளர்களை என்னால் ஈர்க்க முடியவில்லை. மோகன் பாகன் நான் வளர்ந்த கிளப். அதனால் அந்த அணியை விட்டு வெளியேறி, வேறொரு அணியில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது.
கேள்வி: ஷியாம்நகரின் கால்பந்து கலாசாரம் உங்களை இந்த விளையாட்டை மேற்கொள்ள ஊக்குவித்ததா?
சுபா கோஷ்: எனது 5 வயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கிறேன். எனது தந்தை கால்பந்து போட்டிகளுக்கு அழைத்துச் சென்று இவ்விளையாட்டிற்கான அடிப்படைகளை எனக்கு கற்றுக்கொடுத்தார். மேலும், கொல்கத்தாவில் வளர்ந்ததன் மூலம் கால்பந்து விளையாட்டு எனது ரத்தத்தில் ஊறிய ஒன்றாக மாறிவிட்டது.
கேள்வி: நீங்கள் சிறுவயது முதலே மோகன் பாகன் அணியின் பல்வேறு வயது குழுக்களுக்காக விளையாடிவுள்ளீர்கள். உங்கள் அனுபவத்தைப் பற்றி கூறுங்கள்?
சுபா கோஷ்: எனது சிறுவயது முதலே மோகன் பாகன் அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். மேலும் ஐ-லீக் ஜூனியர் தொடர்களில் நான் இந்த அணிக்காக பங்கேற்றது எனக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்ற புகழ்பெற்ற கிளப்பில் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷடம். எனக்கு வாய்ப்பளித்ததற்காக நான் மோகன் பாகன் அணிக்கு கடமைப்பட்டுள்ளேன்.
பின்னர் நான் மோகன் பாகனைவிட்டு செல்வதற்கான நேரம் வந்தது. அப்போது நான் என் தந்தையிடம் இதுகுறித்து கூறினேன். அது அவருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், சிறுவயது முதலே மோகன் பாகனுக்காக விளையாடி, ஒரு பிணைப்பை உருவாக்கியிருந்தேன். தற்போது மோகன் பாகனிலிருந்து வெளியேறிவிட்டேன் என்பது தெரியும், ஆனாலும் என்னுடைய பிணைப்பு என்றென்றும் இருக்கும்.
இருப்பினும், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன் என்று உணர்கிறேன். ஏனெனில் நான் ஒரு கால்பந்து வீரராக வளர வேண்டும். அதற்காக பல போட்டிகளில் விளையாடுவது அவசியம். இப்போது கேரளா பிளாஸ்டர்ஸ் மூலம் எனது கனவை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.