2019ஆம் ஆண்டுக்கான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் எஃப்.சி. கோவா அணியை எதிர்த்து சென்னையின் எஃப்.சி. அணி மோதிய ஆட்டம் புவனேஷ்வரில் உள்ள காலிங்கா மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கிய நிலையில், இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20ஆவது நிமிடத்திற்கு பின்னர் சென்னை அணி வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை கோவா அணியின் தடுப்பாட்ட வீரர்கள் எளிதாக முறியடித்தனர். இதனால் சென்னை வீரர்களுக்கு சிறு பதற்றம் ஏற்பட்டது. 29ஆவது நிமிடத்தில் கோவா அணி வீரர் பிரண்டனுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை வீணடித்தார். இதனையடுத்து இரு அணிகளும் கோல்கள் ஏதும் அடிக்காத நிலையில், முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே கோவா அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. 52ஆவது நிமிடத்தில் கோவா அணியின் நட்சத்திர வீரர் ஃபெர்ரன் கோரோமினஸ் முதல் கோல் அடித்து கோவா அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார்.
இதற்கு பதிலடியாக அடித்த நிமிடத்திலேயே சென்னை அணியின் ரஃபேல் அகஸ்டோ 53ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க 1-1 என ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்த நிலையில், கோவா அணியின் பிரண்டன் ஃபெர்னாண்டஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் கோவா அணி 2-1 என முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து சென்னை அணி வீரர்கள் கோல்கள் அடிக்க எடுத்த அனைத்து முயற்சிகளையும் கோவா அணி தடுப்பாட்ட வீரர்கள் தகர்த்தனர்.
இறுதி நிமிடங்கள் அருகில் வரவர சென்னை அணி வீரர்கள் பரபரப்பாக செயல்படத் தொடங்கினர். இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், கோவா அணி 2-1 என முன்னிலைப் பெற்றது. பின்னர் கூடுதல் நேரமாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், சென்னை அணி தனக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை தவறவிட்டது.
கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் மேலும் எந்த கோல்களும் அடிக்காததால் எஃப்.சி. கோவா அணி 2-1 என்ற கணக்கில் சென்னையின் எஃப்.சி. அணியை வீழ்த்தி முதல் முறையாக சூப்பர் கோப்பை கால்பந்து தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.