கோவா : ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் கோவா எஃப்.சி. அணியை எதிர்த்து மும்பை சிட்டி எஃப்.சி. அணி விளையாடுகிறது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
கோவா அணியைப் பொறுத்தவரையில், தொடர்ந்து அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திவருகிறது. அந்த அணியின் ஃபெர்ரோ கோராமின்ஸ் மற்றும் பேடியா இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்குகின்றனர். கோவா அணியினர் பந்தை பாஸ் செய்வதிலும் சரி, தடுப்பாட்டத்திலும் சரி, சரியான கலவையோடு ஆடுவதால் கோவா அணி எளிதாக வெற்றிபெறுகிறது.
மும்பை சிட்டி அணியைப் பொறுத்தவரையில், ஏதாவது மாயாஜாலம் நடந்தாலொழிய இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் முதல் கட்ட அரையிறுதியில் கோவா அணியிடம் 5-1 என தோற்றதால் நான்கு கோல்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. மும்பை அணி வீரர் சோகோ சிறப்பாக ஆடினாலும், தடுப்பாட்டத்தில் அந்த அணியின் ஆட்டம் சொல்லும்படியாக இல்லை.
ஏற்கனவே பெங்களூரு எஃப்.சி. அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவதாக இறுதிப் போட்டிக்கு நுழையவுள்ள அணி எது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.