கத்தார் நாட்டில் 2022ஆம் ஆண்டில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகின்றன. இதில், ஆசிய கண்டத்திற்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யவில்லை. ஓமன் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் 1-2 என்ற கணக்கிலும், 0-1 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. அதன்பின், கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் டிரா செய்து மூன்று புள்ளிகளுடன் இந்தியா புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இதனால், இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்தச்சுற்றுக்கு முன்னேற முடியும். இந்தியா - கத்தார் அணிகளுக்கிடையேயான தகுதிச் சுற்று போட்டி வரும் மார்ச் 26ஆம் தேதி புபனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதன்பின், ஜூன் 4ஆம் தேதி வங்கதேசதுக்கு எதிரான தகுதிச் சுற்று போட்டி அந்நாட்டில் நடைபெறவுள்ளது.