கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவின் பிரபல கால்பந்து அணியான லோகோமோடிவ் மாஸ்கோ அணியின் நட்சத்திர வீரர் இன்னோகென்டி சமோக்வலோவ், தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சமோக்வலோவ்விற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இது குறித்து லோகோமோடிவ் மாஸ்கோ அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சமோக்வலோவ் இறந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், கசங்காவின் தடுப்பாட்ட வீரர் இன்னோகென்டி சமோக்வலோவ் இறந்த செய்தியை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர் எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல நண்பர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
22 வயதே ஆனா இன்னோகென்டி சமோக்வலோவிற்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். சமோக்வலோவின் இறப்பிற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா எதிரோலி: மொட்டை மாடியை டென்னிஸ் மைதானமாக மாற்றிய இளம்பெண்கள்!