2019-20ஆம் ஆண்டுக்கான சீரி ஏ கால்பந்து தொடர் இத்தாலியில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் யுவென்டஸ் அணி, பர்மா அணியுடன் மோதியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே களத்தில் ஆதிக்கம் செலுத்திய யுவென்டஸ் அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதையடுத்து, ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மிரட்டலான கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ரொனால்டோவின் கோலுக்கு பதிலடி தரும் வகையில், விளையாடிய பர்மா அணி ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியை சேர்ந்த ஆண்ட்ரியஸ் கோர்னிலியஸ் ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். இதையடுத்து, மூன்று நிமிடங்களில் யுவென்டஸ் அணியின் முன்கள வீரர் டிபாலாவின் பாஸை பயன்படுத்தி மீண்டும் அசத்தலான கோல் அடித்தார் ரொனால்டோ. இதனால், யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பர்மா அணியை வீழ்த்தியது.