யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய போட்டியில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து ஸ்வீடன் அணி ஆடியது.
போர்ச்சுகல் அணியின் தொடக்கப் போட்டியில் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ரொனால்டோ பங்கேற்கவில்லை. தற்போது, அவர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் நேற்றைய போட்டியில் அவர் களமிறங்கினார். இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்டம் முடிவடையவிருந்தபோது, கடைசி நிமிடத்தில் ஃபிரீ கிக் மூலம் ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 72ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆட்டத்தின் இரண்டாவது கோலை ரொனால்டோவே அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்த கோல்களின்மூலம் ”சர்வதேசப் போட்டிகளில் 100 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர்” என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிவிட்டேன். இனி எனது இலக்கு 109 கோல்கள் என்ற சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான். சாதனைகள் படைக்க வேண்டும் என்று நான் தீவிரமாக சிந்திப்பதில்லை. அது படிப்படியாக தான் நடக்கும். சாதனைகள் இயற்கையாகவே நம்மிடம் வந்து சேரும் என நான் நம்புகிறேன்'' என்றார்.
முதல் போட்டியில் குரோஷிய அணியை வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் குரூப் 3 பிரிவில், ஆறு புள்ளிகளுடன் போர்ச்சுகல் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க:டெஸ்ட் அணிக்கு திரும்பும் நம்பிக்கை உள்ளது - ஷிகர் தவான்!