ஸ்பெயினில் 2019-20 சீசனுக்கான லா லிகா கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சமீபத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி, தரவரிசைப் பட்டியலில் 19ஆவது இடத்தில் இருக்கும் ஆர்.சி.டி மலோர்கா அணியுடன் மோதியது.
இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே ஆர்.சி.டி மலோர்கா வீரர் லகோ ஜூனியர் கோல் அடித்து அசத்தினார். ரியல் மாட்ரிட் அணி பந்தை அதிகம் செய்து, விளையாடி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், அவர்களால் பதில் கோல் அடித்து போட்டியை டிரா செய்ய முடியாமல் போனது. இதனிடையே, ரியல் மாட்ரிட் வீரர் அல்வேரோ ஒட்ரியோஸோலாவிற்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார்.
இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்.சி.டி மலோர்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் எதிரொலியால் நடப்பு சாம்பியன் பார்சிலோனா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் முதல் இடத்திலிருந்த ரியல் மாட்ரிட் அணி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணி இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வி என 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், ரியல் மாட்ரிட் அணி ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வி என 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.