இந்திய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான 13ஆவது ஐ லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி எஃப்சி - ரியல் காஷ்மீர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நாளை ஸ்ரீநகர் டி.ஆர்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம், ரியல் காஷ்மீர் அணி தனது சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கிய பின் ஸ்ரீநகரில் நடைபெறவிருக்கும் முதல் போட்டி இதுவாகும்.
இதுவரை நடப்பு சீசனில் ரியல் காஷ்மீர் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் டிராவில்தான் முடிந்தது. இதனால்,சொந்த மண்ணில் நாளை காஷ்மீர் அணி நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மறுமுனையில், சென்னை சிட்டி எஃப்சி அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வி என மோசமான ஃபார்மில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இப்போட்டி நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.
இதையும் படிங்க:ஃபிபா தாத்தா மறைவு: 1982 - 2018 வரை உலகக்கோப்பை கால்பந்து தொடருக்குப் பயணித்த ரசிகரின் பயணம்!