பிரான்ஸில் நடைபெற்றுவரும் கால்பந்து லீக் தொடரில் மார்சேய் - பாரிஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மார்சேய் அணி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பாரிஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் பாரிஸ் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் உள்பட ஐந்து பேருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மார்சேய் அணியைச் சேர்ந்த கோன்சலஸ் என்ற வீரரை அவர் அடித்ததால் அவருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில், எதிரணி வீரர் நிறவெறி குறித்த இழிசொல்லைப் பயன்படுத்தியதாலேயே அவரை அடித்ததாக நெய்மர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நேற்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். என்னைப் புண்படுத்திய ஒருவரை (கோன்சலஸ்) அடித்ததால் எனக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
போட்டியை வழிநடத்துபவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்ததால், நான் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
எங்கள் விளையாட்டில், ஆக்ரோஷம், அவமதிப்புகள், சத்தியம் செய்வது என அனைத்துமே விளையாட்டின் ஒரு பகுதியாகும். எனவே அவரை (எதிரணி வீரர்) என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது, அனைத்தும் விளையாட்டின் ஒரு பகுதிதான். ஆனால் இனவெறி குறித்த சொற்களையும் சகிப்பின்மையையும் ஏற்றுக்கொள்ள முடியாது.