தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மான்செஸ்டர் சிட்டியை அப்செட் செய்த வுல்ஃப்ஸ்! - இங்லிஷ் ப்ரீமியர் லீக்

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்துத் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் வுல்ஃப்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

wolves stun manchester city
wolves stun manchester city

By

Published : Dec 28, 2019, 4:13 PM IST

நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று மேற்கு மிட்லாந்தில் நடைபெற்ற லீக் போட்டியில் வுல்ஃப்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 12ஆவது நிமிடத்தில், வுல்ஃப்ஸ் வீரர் டியோகோ ஜோடாவை தள்ளிவிட்டதால், மான்செஸ்டர் சிட்டி கோல்கீப்பர் எடர்சனுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. இதனால், மான்செஸ்டர் சிட்டி அணியின் ஸ்ட்ரைக்கர் செர்ஜியோ ஆகுவேராவிற்கு பதிலாக கோல்கீப்பர் கிளாவ்டியோ பிராவோ களமிறங்கினார்.

இதையடுத்து, ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் வீடியோ உதவி நடுவர் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு வழங்கப்பட்ட ஃபெனால்டியை, ஸ்டெர்லிங் வீணடித்தார். பின், 25ஆவது நிமிடத்தில் மீண்டும் வழங்கப்பட்டது. இம்முறை அவர் அடித்த பந்தை வுல்ஃப்ஸ் கோல்கீப்பர் தடுக்க தவறியதால், ரிபவுண்ட் முறையில் வந்த பந்தை கோலாக்கினார்.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்த கோல் அடிக்கும் முயற்சியில் விளையாடியது. இதனால், 50ஆவது நிமிடத்தில் மீண்டும் ஸ்டெர்லிங் அசத்தலானா கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், எழுச்சிபெற்ற வுல்ஃப்ஸ் அணி 55ஆவது நிமிடத்தில் அடெமா டிராவோர் கோல் அடித்து அணிக்கு நம்பிக்கை பெற்றுத்தந்தார்.

இதையடுத்து, ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி டிஃபெண்டர் மென்டி பந்தைத் தடுக்க தவறியதால், அதைப் பயன்படுத்தி வுல்ஃப்ஸ் வீரர் ரவுல் கோலாக்கினார். இதனால், இரண்டு அணிகளுக்கும் தலா இரண்டு கோல் அடித்திருந்ததால், ஆட்டம் அனல் பறந்தது. ஆட்டம் இறுதி நிமிடத்தை எட்டிய நிலையில், 89ஆவது நிமிடத்தில் வுல்ஃப்ஸ் வீரர் மேட் தோஹர்டி மிரட்டலான கோல் அடித்தார். இறுதியில், வுல்ஃப்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், வுல்ஃப்ஸ் அணி 19 போட்டிகளில் ஏழு வெற்றி, ஒன்பது டிரா, மூன்று தோல்விகள் என 30 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், மான்செஸ்டர் சிட்டி அணி 19 ஆட்டங்களில் 12 வெற்றி, இரண்டு டிரா, ஐந்து தோல்வி என 38 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:ஜோகோவிச்சுக்கு ஹெட்டிங் சொல்லித்தந்த ரொனால்டோ!

ABOUT THE AUTHOR

...view details