ஜெர்மனியின் பண்டஸ்லீகா கால்பந்து தொடர் பார்வையாளர்களின்றி தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஜூன் மாதம் மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ளவிருக்கும் அணிகளின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மே 19, மே 21, மே 22 ஆகிய நாள்களில் 996 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில், இரு கிளப்களைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இரு வீரர்களும் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக செவ்வாய் கிழமை 748 வீரர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் பிரீமியர் லீக் அணிகளைச் சேர்ந்தவர்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.