கால்பந்து வரலாற்றின் ஜாம்பவானாக கருதப்படும் அர்ஜென்டினாவின் டியாகோ மாரடோனா, மாரடைப்பினால் நேற்று மரணமடைந்தார். இவரது மரணச் செய்தியை அறிந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பல துறை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மாரடோனாவின் நண்பரும், பிரேசில் கால்பந்து ஜாம்பவானுமான பீலே தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், "இது மிகவும் சோகமான செய்தி. நான் என்னுடைய சிறந்த நண்பனை இழந்தேன். இந்த உலகம் ஒரு சிறந்த கால்பந்து வீரரை இழந்துள்ளது. அவரைப் பற்றி சொல்வதற்கு ஏராளமாக உள்ளது. ஆனால் இப்போதைக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் துணைநிற்கட்டும். என்றாவது ஒருநாள் நாங்கள் இருவரும் சொர்க்கத்தில் கால்பந்து விளையாடுவோம் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக 2005ஆம் ஆண்டு பீலே தொகுத்து வழங்கிய உரையாடல் நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக டியாகோ மாரடோனா அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நியூ., தொடரில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது - முகமது அமீர்!