சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இப்பெருந்தாற்றால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், யூரோ கோப்பை, அந்தந்த நாட்டின் லீக் தொடர்களும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஜெர்மனியில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.
இதனால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2019-20 சீசனுக்கான பண்டஸ்லிகா தொடர் மே 16ஆம் தேதி பார்வையாளர்களின்றி தொடங்கும் என ஜெர்மன் கால்பந்து லீக் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய கண்டங்களில் ஜெர்மனியில்தான் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் கால்பந்து லீக் தொடர் மீண்டும் தொடங்கவுள்ளது.