ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணியும், செவில்லா அணியும் மோதின.
இப்போட்டியில் ஆரம்பம் முதலே பார்சிலோனா அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி போட்டியில் 27ஆவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் லூயில் சுவரஸும், 32ஆவது நிமிடத்தில் ஆர்டூரோ விடலும், 35ஆவது நிமிடத்தில் ஓசுமனே டெம்ப்லேவும் அடுத்தடுத்து கோல் அடித்து தங்களின் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். இதனால் எட்டே நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்த பார்சிலோனா அணி முதல் பாதியில் 3-0 என முன்னிலை வகித்தது.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பார்சிலோனா அணி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் எதிரணியினர் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறினர். இறுதியில் ஆட்டம் முடிவதற்கு 12 நிமிடம் இருந்த வேளையில், தங்கள் அணிக்கு கிடைத்த ஃபீரி கிக் வாய்ப்பை கோலாக மாற்றினார் பார்சிலோனா கேப்டன் லயனல் மெஸ்ஸி.
மேற்கொண்டு இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்காததால் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில், செவில்லா அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் ஐந்து வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என பார்சிலோனா அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி தங்களின் பரம எதிரியான ரியல் மாட்ரிட்டை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் அணி நடப்பு சீசனில் ஒன்றில் கூட தோல்வியுறாமல் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் பார்சிலோனா அணியின் அறிமுக வீரர் ரொனால்டு அராஜு பவுல் செய்ததற்காகவும், ஓசுமனே டெம்ப்லே வாக்குவாதம் செய்ததற்காகவும் வெளியேற்றப்பட்டனர்.