இந்தியாவில் நடத்தப்படும் ஐஎஸ்எல் (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - மும்பை சிட்டி அணிகள் மோதின.
இந்த சீசனின் தொடக்க போட்டியில் அத்லெடிக்கோ கொல்கத்தாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதால் உற்சாகத்துடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆவலுடன் மும்பை அணியும் களமிறங்கின. இந்தப் போட்டி கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றதால் கேரளா அணி சற்று அதிக தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது.
கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் பரபரப்பான தருணம் இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதிக்கொண்டனர். இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிவடைந்தது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டமும் கோல் இல்லாமல் தொடர்ந்தது. அப்போது ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அறிமுக வீரர் அமைன் செர்மிட்டி கோல் அடித்தார். பின்னர் இறுதிவரை முயற்சித்து இரு அணியினரும் கோல் அடிக்காததால் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி கொச்சியில் முதன்முறையாக வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைத்தது. இப்போட்டியில் கோல் அடித்து வெற்றிக்கு உதவிய மும்பை சிட்டி வீரர் அமைன் செர்மிட்டி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்தப் போட்டிக்குப்பின் மும்பை அணி மூன்றாவது இடத்திலும், கேரளா அணி நான்காவது இடத்திலும் உள்ளன.