இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து ஆறாவது சீசன் சனிக்கிழமை தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்றைய நான்காவது லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி. - எஃப்.சி. கோவா அணிகள் மோதின. பலம்வாய்ந்த கோவா அணியை சென்னை அணி அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
கோவா ஜவஹர்லால் மைதானத்தில் இப்போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோவா வீரர்கள் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இதற்கு பதிலடி தரும்விதமாக சென்னை அணி வீரர்களும் எதிணியின் கோல் முயற்சிகளைத் தடுத்தனர்.
இருப்பினும் 30ஆவது நிமிடத்தில் கோவா வீரர் செமின்லென் டாங்கெல் கோலடித்து தங்கள் அணியை முன்னிலைப் பெறச் செய்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
சென்னையின் எஃப்.சி. - எஃப்.சி. கோவா அணிகளுக்கு இடையேயான போட்டி இரண்டாம் பாதியிலாவது சென்னையின் எஃப்.சி. எழுச்சிப் பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இரண்டாவது பாதியிலும் கோவா வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காண்பித்தனர். அந்த அணியின் பெர்ரான் கோரோமினாஸ் 62ஆவது நிமிடத்திலும் கார்லாஸ் பினா 81ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இப்போட்டியில் இறுதிவரை சென்னை வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது.
இதனால் எஃப்.சி.கோவா அணி தனது முதல் போட்டியிலேயே 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்.சி.யை வீழ்த்தியது. கடந்த சீசனில் கடைசி இடம் பிடித்த சென்னையின் எஃப்.சி. அணி இம்முறை எழுச்சிப்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் முதல் போட்டியிலேயே அந்த அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையப் போட்டியில் சென்னை அணி மூன்று முறை வீரர்களை மாற்றியது. அதே சமயத்தில் அந்த அணியில் ஏழு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.