இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து ஆறவாது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இதுவரை அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளை நிறைவுசெய்துள்ள நிலையில் நேற்று ஹைதராபாத் எஃப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்.சி. அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் நார்த் ஈஸ்ட் அணி ஒரு வெற்றி, இரண்டு டிரா என்ற நிலையிலும் ஹைதராபாத் அணி ஒரு வெற்றி இரண்டு தோல்வி என்ற நிலையிலும் களமிறங்கின. ஹைதராபாத்தின் ஜி.எம்.சி. பாலயோகி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கத்திலேயே உள்ளூர் அணி வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டனர். ஐந்தாவது நிமிடத்திலேயே ஹைதராபாத் வீரர் மார்சிலின்ஹோ கோல் அடிக்க முயற்சித்து தோல்வியைத் தழுவினார்.
இதைத் தொடர்ந்து நார்த் ஈஸ்ட் வீரர்களும் கோல் அடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் ஹைதராபாத்தின் தடுப்பாட்டத்தை கடக்க முடியவில்லை. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் முதல் பாதி ஆட்டம் கோல் இல்லாமல் சமனில் முடிவடைந்தது.