இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் பைச்சுங் பூட்டியா. இவர் இந்திய அணிக்காக 100 சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த நிலையில் பூட்டியா சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது குறித்தும், வீரர்கள் பெறும் வெளிப்பாடு மற்றும் உள்கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்தும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பூட்டியா, 'தற்போது கால்பந்து விளையாட்டுக்கு உள்ள ஆதரவு, தளங்கள், போட்டியின் நிலை, வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் என அனைத்துமே முன்பு இருந்ததை விட தற்போது சிறந்ததாகவுள்ளது. இப்போது இந்திய அணி பங்கேற்ற சர்வதேச போட்டிகளை எடுத்துக்கொண்டால், அது நாங்கள் இருந்த காலத்தில் விளையாடியதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கும்.
மேலும் அப்போது நாங்கள் குறைவான ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்க முடிந்தது. அதுமட்டுமின்றி அப்போட்டிகளும் கடுமையான அணிகளுடனே இருந்தது. ஆனால் தற்போதுள்ள வீரர்கள் அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்பதன் மூலம், அவர்களால் தங்களது திறன்களை வெளிப்படுத்த முடிகிறது.
மேலும் ஐ.எஸ்.எல் போன்ற தொடர்கள் நடத்தப்பட்டு வருவதால் வீரர்களுக்கான பயிற்சி மைதானம், போட்டிகளின் எண்ணிக்கை, மைதானங்களின் தரம் ஆகியவை உயர்ந்துள்ளது. நான் விளையாடிய காலத்தில் பந்து கூட உருளாத இடத்தில் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதனை இன்றுள்ள மைதானங்களுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது.
என்னால் ஐஎஸ்எல் போன்ற தொடர்களில் விளையாட முடியவில்லை என்ற கவலை உண்டு. ஆனால் தற்போதுள்ள வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனால் இந்திய கால்பந்து அணியின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தந்துள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:“அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஐபிஎல் சீசன் 14 நடக்கும்“- சவுரவ் கங்குலி!