நடப்பு சீசனுக்கான ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி எஃப்சி, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உள்ளிட்ட 11 அணிகள் பங்கேற்றுவருகின்றன. இந்தத் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 20 போட்டிகளில் விளையாடும். அதில், புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 10) மேற்கு வங்கத்தின் கல்யாணி நகரில் நடைபெற்ற 16ஆவது லீக் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மோகன் பகான் அணி, ஐஸ்வால் எஃப்சி அணியை எதிர்கொண்டது. இதுவரை 15 போட்டிகளில் ஆடிய மோகன் பகான் அணி 36 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல அந்த அணிக்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே தேவைப்பட்டதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அது வீணானது. இதனால், ஆட்டம் டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கோகன் பகான் வீரர் பாபா தியவாரா அசத்தலான கோல் அடிக்க, மோகன் பகான் அணி இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்வால் எஃப்சி அணியை வீழ்த்தியது.