அர்ஜென்டினா - பிரேசில் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியின் மூலம், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் மூன்று மாத தடைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பினார்.
முன்னதாக, கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடர், பிரேசில் அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேட்ச் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என மெஸ்ஸி கருத்துத் தெரிவித்திருந்தார். மெஸ்ஸியின் ஊழல் குறித்த கருத்துக்கு கோபா அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்ததுள்ளது. இதுமட்டுமல்லாது, சர்வதேச போட்டிகளில் அடுத்த மூன்றுமாதத்திற்கு விளையாடவும் அவருக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது. 13ஆவது நிமிடத்தில் வழங்கப்பட்ட பெனால்டி முறை மூலம் மெஸ்ஸி கோல் அடித்தார்.