கால்பந்து போட்டிகள் என்றால் தற்போதைய ரசிகர்களுக்கு மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இந்த இரண்ட வீரர்களின் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். காரணம் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடிப்பதோடு பல சாதனைகளையும் படைத்து ரசிகர்களை குதூகலமடைய வைக்கின்றனர்.
அந்த வகையில் பார்சிலோனா அணியில் விளையாடிவரும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி, தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். பார்சிலோனா அணி,ஸ்பெயினில் நடத்தப்படும் லா லிகா தொடரில் தற்போது விளையாடிவருகிறது. அந்த அணி நேற்று ஆர்சிடி மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி 17, 41, 83 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இது லா லிகா தொடரில் மெஸ்ஸி அடிக்கும் 35ஆவது ஹாட்ரிக் கோலாகும். இதன்மூலம் லா லிகா தொடரில் அதிகமுறை (34) ஹாட்ரிக் அடித்த ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.
மேலும் நடப்பு சீசனில் 12 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, ஐரோப்பாவில் நடத்தப்படும் ஐந்து முக்கிய லீக் தொடர்களில் தொடர்ச்சியாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட கோல் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.
பலான் டி ஆர் விருது பெற்ற மெஸ்ஸி தற்போது 32 வயதாகும் மெஸ்ஸி, ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தால் ஐரோப்பாவில் சிறந்த வீரருக்காக வழங்கப்படும் பலான் டி ஆர் (Ballon d'or) விருதை ஆறாவது முறையாக கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.