ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோறும் லா லிகாவில் வெற்றி பெறும் அணிக்கும் கோப்பா டெல் ரே வென்ற அணிக்கும் இடையே நடைபெறும். இரு அணிகளும் நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடுவது வழக்கம்.
ஆனால் 2019ஆம் ஆண்டு முதல் கோப்பையில் நான்கு அணிகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் லா லிகாவில் வெற்றி பெற்றவர், இரண்டாவது இடம் பிடித்தவர் மேலும் கோப்பா டெல் ரேவில் வெற்றி பெற்றவர், இரண்டாம் இடம் பிடித்தவர் என நான்கு அணிகள் பங்குபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி லாலிகா தொடரில் முதலிடம் பிடித்த ரியல்மாட்ரிட் அணியும், இரண்டாம் இடம் பிடித்த பார்சிலோனா அணியும், கோப்பா டெல் ரே கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறாத நிலையில், இறுதி போட்டிக்கு முன்னேறிய அணிகளான ரியல் சோசைடோ மற்றும் அத்லெடிக் பில்பாவோ அணிகள் விளையாடின.
இதில் பார்சிலோனா மற்றும் அத்லெடிக் பில்பாவோ அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று (ஜன.18) நடைபெற்றது.
இப்போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பார்ச்சிலோனா அணிக்கு ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் அண்டோனி மூலம் முதல் கோல் கிடைத்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அத்லெடிக் அணிக்கு ஆஸ்கர் டி மார்கோஸ் 42ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் அண்டோனி 77ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். இதையடுத்து, அத்லெடிக் அணியின் அசிர் ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்திலும், வில்லியம்ஸ் ஆட்டத்தின் 94ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார்.
பின்னர் ஆட்டத்தில் கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் கோல் அடிக்க முயற்சித்த பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, எதிரணி வீரரை தாக்கியதன் காரணமாக அவருக்கு 120+1ஆவது நிமிடத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் அத்லெடிக் பில்பாவோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி, ஸ்பானீஷ் சூப்பர் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க:அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர்