ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பார்சிலோனா (ஸ்பெயின்) - மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து) அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டி பார்சிலோனாவின் கேம்ப் நெள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்சிலோனா அணி வீரர்கள் பந்தை அதிகம் பாஸ் செய்தே ஆடினர். அவர்களது சூப்பரான பாஸை மான்சஸ்டர் அணியின் வீரர்களால் தடுக்கமுடியாமல் போனது. இதைத்தொடர்ந்து, 16-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனும் தடுப்பு வீரருமான யங் செய்த தவறான பாஸை, பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி பெற்றுக் கொண்டார். பின் இரண்டு மான்செஸ்டர் யுனைடெட் தடுப்பு வீரர்களை எளிதாக கடந்து தனது இடது காலினால் அசத்தலான கோல் அடித்தார்.
பின் 20-வது நிமிடத்திலும் மெஸ்ஸியிடம் மீண்டும் பந்து சென்றது. இம்முறை அவர் தனது வலது காலினால் பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். மெஸ்ஸி அடித்த பந்தை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல்கீப்பர் டேவிட் டி கியா சரியாக பிடிக்காததால் அது கோலாக மாறியது. இதைத்தொடர்ந்து, கோல் அடிப்பதற்காக மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் பலனளிக்காததால் முதல்பாதி ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி முன்னிலை பெற்றுருந்தது.
பின்னர், தொடங்கிய இரண்டாம் பாதியிலும் பார்சிலோனா பந்தை தன்வசப்படுத்தியே ஆடியது. குறிப்பாக 60-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஃபிலிப் கோட்டினோ மிரட்டலான கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து, மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் அவர்களால் கோல் அடிக்க முடியமால் போனது. இறுதியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
கொட்டினோவின் அசத்தலான கோல்
முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் கோல் விதிமுறைகளில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றதையடுத்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.