பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி, நேற்றுமுன் தினம் ஃபிபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்று சாதனைப் படைத்தார். இதற்கு முன்னதாக, அவர் 2009, 2010, 2011, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்க விருதை வென்றார். இதன்மூலம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டதால் மெஸ்ஸியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிறந்த வீரர் விருதை வென்ற மெஸ்ஸி இந்நிலையில், நேற்று நடைபெற்ற லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, வில்லரியல் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி பார்சிலோனாவின் சொந்த மைதானம் கேம்ப் நெளவில் நடைபெற்றது. சிறந்த வீரர் விருதை வென்ற மெஸ்ஸி இப்போட்டியில் பங்கேற்றார். முன்னதாக பார்சிலோனா அணி கிரானடா அணியுடனான போட்டியில் 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. இதனால், நேற்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
மெஸ்ஸி - சுவாரஸ் - க்ரீஸ்மேன் (MSG) இந்த ட்ரியோ முதல்முறையாக கேம்ப் நெள மைதானத்தில் களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே பார்சிலோனா அணிக்கு கார்னர் கிக் வழங்கப்பட்டது. மெஸ்ஸி தந்த க்ராஸை க்ரீஸ்மேன் ஹெட்டர் முறையில் கோல் அடித்து அசத்தினார்.
பின்னர், 15ஆவது நிமிடத்தில் ஆர்தர் மேலோ மிரட்டலான முறையில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி முழுவதும் பார்சிலோனா பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடி வந்தது. முதல் பாதி முடிகின்ற நேரத்தில் வில்லரியல் வீரர் சன்டி காஸோர்லா 44ஆவது நிமிடத்தில் சிறப்பான கோல் அடித்ததால் முதல் பாதி முடிவுக்கு வந்தது.
காயத்தால் அவதிபடும் மெஸ்ஸி இதனிடையே, இரண்டு மாதங்களாக காயத்திலிருந்து மீண்டு வந்த மெஸ்ஸிக்கு மீண்டும் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இரண்டாம் பாதியில் அவருக்கு பதிலாக டெம்பலே மாற்று வீரராக களமிறங்கினார். இறுதியில் பார்சிலோனா அணி இப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்த வெற்றியின்மூலம், அந்த அணி விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு லீக் போட்டியில் பார்சிலோனா அணி கெடாஃபி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பார்சிலோனா - வில்லரியல் போட்டி காயம் காரணமாக மெஸ்ஸி இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. சிறந்த வீரர் விருது வென்ற மகிழ்ச்சி நீடிப்பதற்குள் மீண்டும் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.