நடப்புச் சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி, எய்பார் அணியுடன் மோதியது. பார்சிலோனா அணி இந்தச் சீசனில் 52 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட்டைவிட ஒரு புள்ளி பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருந்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்க பார்சிலோனா அணி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே பார்சிலோனா அணி வழக்கம்போல பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது. குறிப்பாக, அந்த அணியின் கேப்டனான மெஸ்ஸி ஆட்டத்தின் 14, 37, 40, 87 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், கடந்த நான்கு போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததற்கு இப்போட்டியில் மெஸ்ஸி நான்கு கோல் அடித்து ஈடுசெய்துள்ளார்.
இதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகள், கிளப் போட்டிகள் என 1000 கோல் அடிப்பதில் ஈடுபட்ட முதல் வீரர் என்ற புதிய உலகச் சாதனையை அவர் படைத்தார். மெஸ்ஸி இதுவரை அர்ஜென்டினா நாட்டிற்காகவும், பார்சிலோனா கிளப் அணிக்காகவும் 696 கோல்களை அடித்தது மட்டுமின்றி 306 அசிஸ்டுகளையும் வழங்கி தான் ப்ளே மேக்கர் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.