இந்தியாவின் நட்சத்திர கால்பந்து வீராங்கனை பாலா தேவி. இவர் ஸ்காட்லாந்து கால்பந்து கிளப்பான ரேஞ்சர்ஸ் எஃப்சி அணிக்காக ஒப்பதமாகியுள்ளார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஐரோப்பிய கால்பந்து கிளப்பிற்காக விளையாடிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரேஞ்சர்ஸ் எஃப்சி - மதர்வெல் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ரேஞ்சர்ஸ் எஃப்சி அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அப்போட்டியில் பாலா தேவி தனது பங்கிற்கு ஒரு கோலையும் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு பாலா தேவி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் குத்துச்சண்டை ஜாம்பவான் மேரி கோம் தான், என்னுடைய உத்வேகம் என சுட்டிக்கட்டியுள்ளார்.
குத்துசண்டை ஜாம்பவான் மேரி கோம் இதுகுறித்து பேசிய பாலா தேவி, “என்னுடைய உத்வேகமாக கருதுவது மேரி கோமைத்தான். ஏனெனில் அவர் கடுமையான சூழலிலிருந்து வந்து, பல சாதனைகளை படைத்துள்ளார். ஒரு தாயான பிறகும் அவர் தொடர்ந்து நாட்டிற்காக பல சாதனைகளை புரிந்தவர். நாங்கள் 2014ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக பயணித்தோம். அவர் மிகவும் நட்பான ஒருவர். எங்களுக்கு அவர் எப்போதும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும் மதர்வெல் அணிக்கெதிராக நான் கோலடித்ததற்கு, பல்வேறு தரப்பிலிருந்து எனக்கு பாராட்டுகள் கிடைத்தது. நானும் அதை எண்ணி பெருமையடைந்தேன். அதன் காரணமாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த வீராங்கனை பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பது என்னுடைய மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க:பயிற்சி ஆட்டம்: காயமடைந்த கிரீன்; உதவிய சிராஜ்!