இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணி மிகவும் பிரபலமானது. அந்த அணிக்கு என சொந்தமாக இருக்கும் ஓல்டு டிராஃபோர்டு மைதானம் 75 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட்டது. இங்கிலாந்திலேயே மிகப்பெரிய இருக்கைகள் கொண்ட மைதானமாக ஓல்டு டிராஃபோர்டு திகழ்கிறது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒவ்வொரு முறையும் தனது சொந்த மண்ணில் விளையாடும்போது ரசிகர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்து வந்தது. அதனால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டியை நின்று பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
முன்னதாக, 1989இல் லிவர்பூல் - நாட்டிங்ஹாம் அணிகளுக்கு இடையிலான எஃப் ஏ கோப்பை அரையிறுதிப் போட்டி ஹில்ஸ்போராக் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது போட்டியை நின்றுகொண்டு பார்த்த லிவர்பூல் ரசிகர்கள் 96 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், 1994ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் முக்கியமான போட்டிகளை ரசிகர்கள் மைதானத்தில் நின்றுகொண்டு பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டில் விளையாட்டு மைதான பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின்படி ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் கூடுதலாக 1500 இருக்கைகளைக் கட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக, நடப்பு இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் சீசன் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதால், அடுத்த சீசன் முதல் சோதனை முயற்சியாக மைதானத்தின் வடகிழக்குப்பகுதியில் 1500 இருக்கைகள் கட்டப்படும் என மான்செஸ்டர் யுனைடெட் அணி தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றிகண்டால், இதுபோன்று சில பகுதிகளிலும் கூடுதலாக இருக்கைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் சீசன் ஜூன் 8ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூலை 27இல் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சீசனை முடிப்பதற்கு இன்னும் 92 போட்டிகள் உள்ளதால், ஆட்டங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடைபெறும் என்றும்; ஒவ்வொரு போட்டியையும் பார்க்க மைதானத்திற்கு 400 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு சீசனின் புள்ளிகள் பட்டியலில் லிவர்பூல் அணி 29 போட்டிகளில் 27 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி 28 போட்டிகளில் 57 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. புள்ளிகளின் வித்தியாசப்படி கணக்கிட்டால், லிவர்பூல் அணி நடப்பு சீசன் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதும் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க:பாஸ்போர்ட் போலி என்பது எனக்கு தெரியாது - ரொனால்டினோ!