இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்துவருகிறது. 2017-18, 2018-19 ஆகிய இரண்டு சீசன்களிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அடுத்த ஆண்டிலிருந்து சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க மான்செஸ்டர் சிட்டி அணிக்கு இரண்டுகள் தடைவிதித்து யூஏஃபா அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி சுவிச்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி மீதான எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும், ஆதாரம் இல்லாததால் அந்த அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை தற்போது நீக்கப்பட்டது.
அதே சமயம், இந்த வழக்கில் புலனாய்வு குழுவினருடன் ஒத்துழைக்க தவறியதால் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு 10 மில்லியன் யூரோ (11.3 மில்லியன் டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டது.