2019-20ஆம் ஆண்டு சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தில் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் செல்சீ அணியிடம் தோல்வியுற்றது.
இதனால் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த நிலையில், மான்செஸ்டரில் உள்ள எதியாட் மைதானத்தில் நேற்று (ஜூலை இரண்டு) நடைபெற்ற லீக் போட்டியில், புதிய சாம்பியன் லிவர்பூல் அணியை, முன்னாள் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி எதிர்கொண்டது.
சீசன் முடிவதற்கு முன் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால், அவர்களை கெளரவிக்கும் விதமாக இப்போட்டி தொடங்குவதற்கு முன் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள், லிவர்பூல் அணி வீரர்களுக்கு கார்ட் ஆஃப் ஹானர் (guard of honour) வழங்கினர்.
இதுதான் லிவர்பூல் அணிக்கு சாதகமாக அமைந்த ஒரே விஷயம். ஏனெனில் போட்டி தொடங்கியதிலிருந்து இறுதி வரை புதிய சாம்பியன் லிவர்பூல் அணிக்கு கொஞ்சம்கூட கருணை காட்டாமல் மான்செஸ்டர் சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் லிவர்பூல் டிஃபென்டர் கோமஸ், மான்செஸ்டர் சிட்டி அணியின் ஃபார்வர்டு வீரர் ரஹிம் ஸ்டெர்லிங்கை ஃபவுல் செய்தார். இதன் விளைவாக மான்செஸ்டர் சிட்டி அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி கிக்கை அந்த அணியின் நடுகள வீரர் கெவின் டி ப்ரூயின் கோலாக்கினார்.
அதனைத் தொடர்ந்து 35ஆவது நிமிடத்தில் ரஹிம் ஸ்டெர்லிங்கும், அடுத்த பத்து நிமிடங்களில் மான்செஸ்டர் சிட்டி அணியின் மற்றொரு முன்கள வீரர் ஃபில் ஃபோடன் ஆகியோரும் அசத்தலாக கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் மான்செஸ்டர் சிட்டி அணி, லிவர்பூல் அணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் தராமல் சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் லிவர்பூல் சேம்பர்லின் பந்தைத் தடுக்க முயற்சிக்க அது செல்ஃப் கோலாக மாறியது.
இறுதியில், மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது. பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணி இப்போட்டியில் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.